இம்மலேசிய மண்ணில் தமிழர்கள் கால் பதித்து ஓராயிரம் ஆண்டுகட்கு மேற்பட்டதாய் இருப்பினும் வெள்ளையர்களால் தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட முன்னோர்கள் கடந்த இருநூறு ஆண்டுகட்கு மேலாக அயராது உழைத்து இந்நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, பண்பாடு, விளையாட்டு, கல்வி அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்கும், நிலைப்பாட்டிற்கும், நீடித்த வளர்ச்சிக்கும், முகாமையாய்ப் பங்காற்றியிருக்கின்றனர்; இருந்தும் வருகின்றனர் என்பது மறுக்கவியலாத பேருண்மையாகும்.
இருப்பினும், இக்கால் நிலைத்தன்மையற்ற அரசியல் சமூகவியல், பொருளியல் சூழல்களில் தமிழர்கள் சிக்கித்தவித்துப் போராடி வருகின்றனர் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் நன்குணர்ந்து உரிமைப் போராட்டத்தில் பையப் பைய ஈடுபட்டுள்ளனர்.
இஃது இப்படி இருக்க நமது இளைய சமுதாயத்தினரின் போக்கு நமக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது, தவறான வழிகாட்டல்களாலும் மொழி உணர்வின்மையாலும், திட்டமிடப்பட்ட முறையான, செறிவான தொலைநோக்கு இன்மையாலும் நமது இளையோரின் எதிர்காலம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதை நாம் அனைவரும் நன்குணர்வேம்!
இவ்வேளையில் வன்முறை, தீயக் கூட்டுறவு, குடும்பப் பின்னடைவு, தன்னூக்கமின்மை போன்ற கூறுகளால் பாதிப்புற்றுச் சீரழியும் இளையோரைத் திருத்த முயன்று சமயம் கட்டொழுங்கு, தன்னூக்கம், அறிவாற்றல், மேலாண்மைத் திறன், புனைவாக்கச் சிந்தனை (Creative) போன்ற பல்வேறு உயரிய பண்புநலன்களைக் கொடுத்து இளையோரை உருவாக்கும் கடப்பாட்டில் இருந்தும் நாம் பின்வாங்கி விடக்கூடாது.
இவ்விழுமியப் பணியானது இளைய சமுதாயத்தினரிடையே புத்தெழுச்சியை ஏற்படுத்த அடித்தளமாக அமையும் என்பதை நாம் நன்குணர வேண்டும். மேலும், இளையோரைப் கொண்டே சீர்படுத்தும் அணுகுமுறையானது நல்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.